தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திம்மக்குடி அருகே கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்னும் சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த சிற்ப சாலையில் முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல வித சுவாமி சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, பல வெளிநாடுகளுக்கும், இங்கு செய்யப்படும் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள 6 அடி உயர தமிழ் தாய் சிலை, ஜெர்மன் நாட்டில் உள்ள தமிழ் சங்க கட்டடத்தில் உள்ள 6 அடி உயர மகாத்மா காந்தி சிலை, ரஷ்ய நாட்டின் மருத்துவ ஆய்வு கழகத்தில் உள்ள 5 அடி உயர நடராஜர் சிலை உள்ளிட்டவை இந்த சிற்ப சாலையில் செய்யப்பட்டவையே. இந்த நிலையில் இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிக உயரமான ஆனந்த தாண்டவ நடராஜர் ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சோழர் கால பாணியில் ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயரத்தில், 17 அடி அகலத்தில் 15 டன் எடையில் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை வேலூர் பொற்கோயிலில் வைக்க செய்யப்பட்டது.