உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயில் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் இக்கோயில் வளாகத்தில் பெருவுடையார் பெரியநாயகி அம்மன், வரஹி அம்மன், விநாயகர் கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என தனித்தனியே அமைந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்று வரும்நிலையில் முதல் கட்டமாக பிறந்தால் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவை ரசாயனக் கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டு கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகை சீரமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்த சிவலிங்கங்களை யாரும் தொடாத வகையில் தடுப்பு, கதவு ஆகியவை சீரமைக்கப்பட்டன.
கோயில் வளாகத்தில் ஆங்காங்கே கருங்கற்கள் தளம் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. விமான கோபுரத்தில் பின்பகுதியில் சேதமடைந்த செல்கள் தளம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பெருவுடையார் சன்னதி உள்ளிட்ட கோபுரங்களை சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் தஞ்சை கேரளாந்தகன் கோபுரத்திலிருந்து ராஜ ராஜன்கோபுரம் வரை நடைபாதையில் கருங்கற்கள் தளத்தை சீரமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது. சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.