டூ வீலர் மெக்கானிக்காக சாதிக்கும் பெண் தஞ்சாவூர்:ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றுசர்வதேச மகளிர் தினம் கொண்டாடுப்படுகிறது. இந்த சிறப்பான நாளில், நாம் பல துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். அவர்களின் திறமையை பாராட்டி மகிழ்கிறோம். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் டூ வீலர் மெக்கானிக்காக பணியாற்றி தனது குடும்பத்தையே சுமந்து, சாதித்து வரும் பெண் குறித்து சிறப்புத் தொகுப்பை காண்போம்.
தஞ்சாவூர் மாதா கோட்டை ரோடு பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ் - ஜெயராணி (37) தம்பதி. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். ஜெயராணிக்கும், டூவீலர் மெக்கானிக்கான அற்புதராஜுக்கும் திருமணம் நிர்ணயிக்கப்பட்ட பின், அற்புதராஜுக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இருப்பினும், அற்புதராஜை திருமணம் செய்துள்ளார் ஜெயராணி.
அற்புதராஜ் கால் முறிவு காரணமாக நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரால் மெக்கானிக் தொழிலை சரியாக செய்ய முடியவில்லை. அப்போது வருமானம் இல்லாத நிலை உருவானது. தனது குடும்ப சூழ்நிலையை கருதி கணவரின் தொழிலான டூ வீலர் மெக்கானிக் தொழிலை ஜெயராணி கையில் எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, நாளடைவில் கணவரின் உதவியோடு அனைத்து மெக்கனிக் யுக்திகளையும் கற்றுத் தேர்ந்தார்.
தற்போது வாட்டர் சர்வீஸ், ஜெனரல் சர்வீஸ், பஞ்சர் ஒட்டுவது, ஆயில் மாற்றுவது மற்றும் இன்ஜின் பிரிப்பது என இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலை சிறப்பாக செய்து வருமானம் ஈட்டி வருகிறார். ஜெயராணியின் திறமையை பாராட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சக்தி விருதும், தனியார் பள்ளி சார்பில் சிங்கப்பெண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரை காணும் ஒவ்வொருவரும் அவரது செயலை பாராட்டி கௌரவித்து செல்வது வழக்கமாகிவிட்டது. ஜெயராணி, திருமணத்திற்கு முன்பு ஐடிஐ ஃபிட்டர் (ITI Fitter) படிப்பை முடித்து அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றுள்ளார்.
அதன்பின் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். தனது கணவரின் உடல் நிலை காரணமாக வேலையை விட்டு, தனது கணவர் செய்து வந்த மெக்கானிக் தொழிலை செய்ய தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மெக்கானிக் தொழிலை தொடர்ந்து செய்து சாதனைப் பெண்ணாக விளங்கி தற்போது குடும்பத்தினருடன் நலமுடன் வசித்து வருகிறார் ஜெயராணி.
இதுகுறித்து டூ வீலர் மெக்கானிக் ஜெயராணி கூறுகையில், மெக்கானிக் வேலையை தனது கணவர் மூலமாக கற்றுத் தேர்ந்தேன். இப்போது என்னால் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் வாகனங்களில் பழுது நீக்கி தருகிறேன். வருமானம் போதுமான அளவு உள்ளது. எனது கணவரின் உறுதுணையால் இந்த மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஐஐடிக்கு செல்ல விரும்பினால் நாட்டை காப்பது யார்?" - ராணுவ பயிற்சி இளம்பெண் சோனியா!