தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேவுள்ள நெய்குப்பை மேலத்தெருவைச் சேர்ந்த இராஜா (47), மைதிலி (37) தம்பதியினர். இராஜா கோவையில் உள்ள தனியார் நூல் மில்லில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகளும் ,19 வயதுடைய மாற்றத்திறனாளி மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தனது மகனின் மருத்துவ செலவிற்கு 4 லட்சம் ரூபாயை அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் கடனாகப் பெற்றுள்ளார். மேலும், வரும் 27ஆம் தேதி இவர்களது மகளுக்கு கும்பகோணம் அருகேயுள்ள அசூரில் திருமணம் நடக்கவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பணத்தை வசூலிக்க திட்டமிட்ட கருணாநிதி, வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் கொடுத்தாக வேண்டும் என்று இராஜா - மைதிலி தம்பதியரைத் தனது உறவினர்களுடன் சந்தித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மைதிலி, ஒரு வேளை உணவு கூட தானாக எடுத்து சாப்பிட முடியாத மாற்றுத்திறனாளி மகனை வைத்துக் கொண்டு, மகளின் திருமணமும் தடைபட்டால் எப்படி வாழ்வது என்று வருந்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மைதிலி, வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கந்துவட்டி கொடுமையால் பூச்சிகொல்லி மருந்தை குடித்த பெண் இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மைதிலி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கந்து வட்டி கொடுமையால் தாய் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பந்தநல்லூர் காவல் துறையினர், கந்துவட்டிக்கு பணம் கொடுத்த கருணாநிதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!