தஞ்சாவூர்: தஞ்சை பொட்டுவாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்லும் வழியில், வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த ஸ்டாலின், இன்றுவரை மருத்துவமனையில் கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.
விபத்து தொடர்பாக ஸ்டாலினின் குடும்பத்தினரால், 2016ஆம் ஆண்டு தஞ்சாவூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கிட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
7 வருடங்களாக கோமா
இருப்பினும் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர், இன்றுவரை இழப்பீட்டை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாலினின் நிலை குறித்து மனு அளிப்பதற்காக, அவரது பெற்றோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், “கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டாலின் கோமாவில் இருந்து வருவதால், குடும்பமே நிலைதடுமாறி சீர்குலைந்துள்ளது. ஸ்டாலினின் மருத்துவ செலவிற்காக, எனது மூத்த மகன் கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிட்டு, கூலி வேலை செய்து வருகிறார். நண்பர்கள், உறவினர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.