தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் 58 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அங்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 10 இளைஞர்கள் என்ற எண்ணிக்கையில் ஒன்று கூடி, அந்தந்த கிராம மக்களை பாதுகாத்திட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் தன்னார்வலர் கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.
முதல்கட்டமாக, தஞ்சை ஒரத்தநாடு ஒன்றியத்தை அடுத்துள்ள ஈச்சங்கோட்டை, பருத்திக்கொட்டை, ஒக்கநாடு மேலையூர், கண்ணுகுடி மேற்கு, தெலுங்கன் குடிக்காடு ஆகிய கிராமங்களில் இவர்கள் பணிகளில் ஈடுபடுவர்.
கரோனா நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடவும், பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிட விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவும், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வகையான உதவிகளையும் செய்திடவும் இந்த இளைஞர்கள் தன்னார்வ வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.