தஞ்சாவூர்:விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும், சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில், விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலி என்ற கிராமத்தில் பிறந்த தெனாலி ராமன் என்ற அரசவைக் கலைஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளார்.
இவர் விகடக்கலையில் புகழ்பெற்றவர் ஆவார். இவர் மூலம் விகடக்கலை வளர்க்கப்பட்டது. தெனாலி ராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம். இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகள் என்ற கலைஞர் விகடக்கலையைக் கற்று, பல ஆண்டுகளுக்கு முன்பு செய்து வந்துள்ளார். தற்போது அந்த கலை அழிந்துள்ளது.
இதனையடுத்து தஞ்சையைச் சேர்ந்த கலைமாமணி குன்னியூர் இரா.கல்யாணசுந்தரம் (80) என்பவர் இந்தக் கலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்தக் கலையை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டுமே இந்த விகடக்கலையை இன்றும் சிரிப்பும், சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் வழியாக விருதுகளையும் பெற்றுள்ளார். நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார்போல் இந்த கலைக்குப் போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மிமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.