தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிந்துபாத்' பட பாணியில் மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

குடும்பச் சூழ்நிலை காரணமாக வெளிநாடு வேலைக்குச்சென்ற இளைஞர்களை மோசடி செய்து வேலைக்கு பயன்படுத்திய கும்பல் குறித்து, மியான்மரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Updated Video of Tamilars in Myaanmar Need Govt Rescue
Etv Bharat

By

Published : Sep 21, 2022, 5:24 PM IST

Updated : Sep 21, 2022, 5:32 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் கொட்டையூர் மேலத்தெருவைச்சேர்ந்த செல்வம் - கலா தம்பதியினரின் இளைய மகன் ஹரிஹரன் (21), ஐடிஐ-ல் எம்எம்வி இன் டீசல் படித்துள்ளார். இவருக்கு தந்தை இல்லை, மூத்த அண்ணன் வெங்கட்ராமன் ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். 2ஆவது அண்ணன் அருண்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஹரன் 3ஆவது மகன், கோவை, சென்னை எனப் பல்வேறு இடங்களில் மோட்டார் மெக்கானிக்காக பணிபுரிந்த வந்த இவர், வீட்டின் கஷ்டத்தையும், கடன் சுமையையும் குறைக்க, வெளிநாடு செல்லத்திட்டமிட்டார்.

இதனால், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சென்னையில் பணி என்று சென்றவர், அங்கிருந்து, தனது நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டில் வேலைக்குச்செல்வதாக தொலைபேசியில் வீட்டிற்குத் தகவல் தந்து விட்டு, அங்கிருந்து சென்னையைச்சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து தலா 60 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் செலவு செய்து, 40க்கும் மேற்பட்டோர் கணினி பணி என ஆசை காட்டி, தாய்லாந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களை அங்கு இருக்க விடாமல், துப்பாக்கி முனையில் கண்களைக்கட்டி அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மருக்கு கடத்திச்சென்றுள்ளனர். அங்கு மலையும், காடும் கொண்ட தனித்தீவு போல அமைந்த பகுதியில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற 40க்கும் மேற்பட்டோருடன் அங்கு ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை வைத்துக்கொண்டு அவர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அலைபேசி வாயிலாக, இணையதளம், சமூக வலைதளம் வாயிலாக, கனிவாகப் பேசி பண மோசடி செய்யும் பணியில் இறக்கிவிட்டுள்ளனர்.

ஒரு நாளைக்கு பத்து கஸ்டமர்களை கவர்ந்திழுக்க வேண்டும் என பணி ஒப்படைக்கப்படுவதாகவும், இதனை முடியாது என வெளியேற நினைப்பவர்களை, 4 லட்சம் ரூபாய் கொடுத்தால் அனுப்பி வைப்பதாகக் கூறி மிரட்டி சரியான உணவு அளிக்காமலும், 18 மணி நேரம் பணி வழங்குவதாகவும், உடல்நலம் சரியில்லை என்றால் கூட பணிக்கு வராவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் என மனவுளைச்சலை ஏற்படுத்துவதுடன், பணி செய்யாமல் முரண்பிடிப்பவர்களை அடி உதை கொடுப்பதாகத்தெரிகிறது.

தாய்லாந்தில் சிக்கித்தவிக்கும் தமிழ் இளைஞர்கள்

இப்படி தமிழர் ஒருவருக்கு கொடுமை நடந்துள்ளது என்றும், அவர்களது கட்டளைகளை மீறுபவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுவதாக மிரட்டப்படுவதாகவும்; இதனால் தங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளதால் உடனடியாக அரசு மூலம் முயற்சிகள் செய்து தங்களை விரைந்து மீட்க வேண்டும் என தங்களது குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் ஒன்று கூடிப்பேசி ஒரு காணொலியைப் பகிர்ந்துள்ளனர்.

இதேபோன்று இதே கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரான ராஜேந்திரன் மகன் ராகுல் (22) இவரும் தற்போது மியான்மரில் சிக்கி தவித்து வருகிறார். மேலும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவைச் சேர்ந்த கருப்பையன் - அனுசுயா தம்பதியினரின் மகன் விக்னேஷ் (22); இவரும் தந்தையை இழந்தவர், தாய் அனுசுயா சத்துணவு கூடத்தில் பணி செய்கிறார். திருமணமான ஒரு தங்கை மட்டும் இருக்கிறார்.

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினரும் தங்களது மகன்களை மீட்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் வெளியுறவுத்துறை வாயிலாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

வீட்டின் ஏழ்மை நிலையைக் கருதி வெளிநாடு வேலைக்குச்சென்ற இளைஞர்கள் இன்று உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில் அப்பாவியாய், தன்னந்தனி காட்டில் சிக்கித்தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தென்காசி சாதி தீண்டாமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஊருக்குள் நுழைய தடை

Last Updated : Sep 21, 2022, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details