தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக ராமநாதனும், துணை மேயராக அஞ்சுகம் பூபதி ஆகிய இருவரும் பதவி வகுத்து வருகின்றனர். இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு சுகாதார வசதி வளாக கட்டிடத்தினை மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக மேயர் இராமநாதன் கட்டிடத்தைத் திறப்பதற்கு முன் அந்தப் பகுதியைச் சேர்ந்த 51வது வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான அஞ்சுகம் பூபதி விழா நடைபெற்ற இடத்தில் இல்லாததால் அஞ்சுகம் பூபதியின் தாயாரைக் கூப்பிட்டு அருகில் நிற்குமாறு மேயர் இராமநாதன் அழைத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவரது தாயார், துணை மேயர் வந்து கொண்டு இருப்பதாக மேயர் ராமநாதனிடம் தெரிவித்து உள்ளார். இதனால் கோபப்பட்ட மேயர் ராமநாதன் உடனடியாக நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டு வெளியில் சென்றார். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விழா நடைபெற்ற இடத்திற்குத் துணை மேயர் அஞ்சுகம் பூபதி வந்த நிலையில், சிறிது நேரம் கழித்து மேயர் இராமநாதன் மீண்டும் வந்தார்.