தஞ்சை: தந்தையுடன் குளத்திற்குக் குளிக்கச் சென்ற சகோதரிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் தேனி வல்லம் புதூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வல்லம் காவல் நிலைய போலீசார் அளித்த தகவலின்படி, தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கிராமம் மகாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கள் புண்ணியமூர்த்தி கோமதி தம்பதியினர். புண்ணியமூர்த்தி புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதான பெரியநாயகி மற்றும் 6 வயதான பிரிதிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பெரியநாயகி வல்லம் புதூரில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பும் பிரதிஷா முதல் வகுப்பும் படித்து வந்தனர்.
கடந்த ஒரு வருடமாக புண்ணியமூர்த்தி தனது குடும்பத்துடன் தன் மனைவியின் சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள வல்லம் புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த புண்ணியமூர்த்தி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு குளிப்பதற்காக வல்லம் புதூரில் இருந்து நாட்டாணி செல்லும் சாலையில் உள்ள புதுக்குளத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தைகளைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தவர் அருகில் எங்கேனும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்துள்ளார். நீண்ட நேரமாகத் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் மீண்டும் குளக் கரைக்கு வந்து தேடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தைகளைத் தேடியுள்ளனர்.