தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி! - 2 kg of fake jewelery in Thanjavur

Thanjavur Gold loan cheating: தஞ்சாவூர் மாவட்டத்தில் வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி செய்த 2 நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி
ரமேஷ், முருகையன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:47 AM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் காந்திமதிநாதன், மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 1.3.2022ஆம் தேதி முதல் 30.9.22 தேதி வரை அருந்தபுரம், திருக்கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (54) என்பவர் தனது பெயரிலும், தனது மனைவி பவானி மற்றும் பவானியின் தாயார் லட்சுமி என்பவருடைய பெயரிலும் 19 தவணைகளாக 1,378 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கில்ட் நகைகளை அடகு வைத்து, ரூ.44 லட்சத்து 55 ஆயிரம் மோசடியாக பெற்று வங்கியை ஏமாற்றி உள்ளார்” என தெரிவித்திருந்தார்.

இதே போன்று, அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேலாளர் விசாலி என்பவர் போலீசிடம் கொடுத்த புகாரில், ரமேஷ் தனது பெயரிலும், தனது மனைவி பவானி மற்றும் தனது வயலில் வேலை பார்த்த அபூர்வம் என்பவருடைய பெயரிலும் 8 தவணைகளாக 681.3 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கில்ட் நகைகளை அடகு வைத்து, ரூ.24 லட்சத்து 34 ஆயிரத்து 700 மோசடியாக பெற்று வங்கியை ஏமாற்றி உள்ளார் என கூறியிருந்தார்.

இரண்டு வங்கிகளிலும் மொத்தம் இரண்டு கிலோ போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், தஞ்சை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி மனோகரன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை மூலமாக வங்கியில் மோசடி செய்து கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த ரமேஷை புதுச்சேரியில் கைது செய்தனர்.

மேலும், இக்குற்றத்திற்கு மூலக்காரணமாக செயல்பட்ட மன்னார்குடியைச் சேர்ந்த முருகையன் (49) என்பவரை மன்னார்குடியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்பகோணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் நகை செய்பவர்கள் மூலமாக தங்க நகை போன்று போலியாக நகை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு நபர்கள் மூலமாக மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் பல தனியார் நகை அடகு கடை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

ABOUT THE AUTHOR

...view details