தஞ்சாவூர்:தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருக்கோவில்களில் உள்ள பெருமாள் கோவில்களிலிருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்குகளில் எழுந்தருளி கருட வாகனத்தில் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருட சேவை புறப்பாடு நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 89வது ஆண்டாக 24 கருட மகோத்சவம் நேற்று ஜுன் 8 ந் தொடங்கியது, நான்கு நாட்கள் நடைபெறும்.
இவ்விழாவில் முதல் நாள் நேற்று வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்ய தேசப் பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்று கருட சேவை விழா துவங்கியது, இதனையடுத்து இன்று 24 பெருமாள்கள் கருடசேவை புறப்பாடு அதிவிமரிசையாக தஞ்சாவூரில் நடைபெற்றது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையிலிருந்து திவ்ய தேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 பெருமாள் கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் சுவாமி மங்கல வாத்தியங்கள் இசைக்கப் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் ராஜ வீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து சேவை அருள் பாலித்தனர்.