உதயநிதிக்கு அமைச்சர் பதவி ; 'ஸ்டாலினின் இந்த அவசரம் ஏன்..?' - டிடிவி தினகரன் கேள்வி தஞ்சாவூர்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 60ஆவது பிறந்த நாளை தனியார் ஹோட்டலில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர்கள் ராஜேஸ்வரன் சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் 60 கிலோ கொண்ட கேக்கினை வெட்டி கொண்டாடினார்.
ஏராளமான தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன், “அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தியை தேர்தலில் வீழ்த்த முடியும். உதயநிதி ஸ்டாலின் திமுகவில் எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் அமைச்சராவதில் தவறில்லை. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் அவசரம் ஏன்..?
அந்த அவசரத்திற்கான காரணம் என்ன என்பதை காலம் தான் உணர்த்தும். தேர்தல் வாக்குறுதியைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி தான் ’திராவிட மாடல்’ ஆட்சி. புதுச்சேரி மக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
’விடியல் ஆட்சி’ என்று சொல்லி விடியா ஆட்சியாக உள்ளது. இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர், புதுச்சேரியில் விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நண்பர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை தயாராவதை ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில்!