தஞ்சாவூர்: ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் சண்முகப்பிரபு, யாழினிக்கு மாலை கொடுத்து மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இத்திருமண விழாவில் பங்குபெற்ற டிடிவி தினகரன் திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால், கனத்த இதயத்தோடு நாங்கள் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.
அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து, வருகின்ற தலைமுறைக்கு எடுத்து செல்வது தலையாய பணி. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகள் கழித்து அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒரே மேடையில் சந்திப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்றைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இந்த சந்தர்ப்பத்தில் பழைய நண்பர்களை உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது தான்.
அம்மாவின் தொண்டர்களாக அம்மாவின் நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் ஒரு சிலரின் சுயநலத்தால், பண திமிரால் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களுக்குள் இருந்த வருத்தங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் உண்மையான ஆட்சி, அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற நானும் நண்பர் ஓபிஎஸ் அவர்களும் கைகோர்த்து இருக்கிறோம். என்றும், ஏதோ விதிவசத்தால் காலத்தின் கட்டாயத்தால் அரசியலைத் தாண்டி எங்களுக்குள் இருந்த அன்பும் நட்பும் என்றென்றும் தொடர்ந்து வந்தது.
அதனால்தான் மீண்டும் இணைந்து பணியாற்றுவது, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்வதற்கும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்காகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் இணைந்து கைகோர்த்து செயல்பட தொடங்கி விட்டது. அதன் நல்ல தொடக்கமாகத்தான் இந்த திருமண விழா அமைந்திருக்கிறது.
இது ஒரு இயற்கையாக நிகழ்ந்த இணைப்பு தான், இந்த இணைப்பு வருங்காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நட்புடன் எந்த ஒரு மனமாச்சர்யங்களுக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாக செயல்படுவோம்” என்று உறுதி தெரிவித்தார்.