தஞ்சாவூர்: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக அடுத்து வர இருக்கும் பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை நேற்று (மே 13) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக 100 பேருந்துகளில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் அனைத்து அரசு பேருந்துகளிலும் இக்கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பாக்கி இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல்கட்டமாக 325 கோடிகளுக்கும், அடுத்தது 200 கோடிகளுக்கும், நிதி ஒதுக்கி அவை வழங்கப்பட்டு விட்டது. இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ரூபாய் 1200 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வழங்கி உள்ளார்கள். விரைவில் குடும்ப ஓய்வூதியம் பாக்கியில்லாமல் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கும், தற்போது நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் பேருந்துகளில் முதல்கட்டமாக வழங்கமான பேருந்துகள் 400 வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.