தஞ்சாவூர்:தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களுக்குக் காவல் துறையினர் வெள்ளி நாணயத்தைப் பரிசளித்து, வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனமான ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாகப் பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த பெண்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தாங்கள் ஹெல்மெட் அணிந்து இருக்கிறோம் எதற்கு போலீசார் நிறுத்துகிறார்கள் என அச்சத்துடன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது அவர்களிடம் வெள்ளி நாணயத்தைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரி மற்றும் அவரது குழுவினர் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளி நாணயத்தைப் பரிசளித்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு காவல் துறையினர் பரிசு அளித்ததுடன் அவர்களை மேலும் ஊக்கிவிக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்ததற்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.