நிழுவையில் உள்ள 96 மாத பஞ்சப்படியை உடனே வழங்குக: ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் காத்திருப்பு போராட்டம்! தஞ்சாவூர்:ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 96 மாத பஞ்சப்படியினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செப்.26) ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், கும்பகோணம் மண்டல தலைமையகம் முன்பு முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு, கடந்த எட்டு ஆண்டுகளாக, அதாவது 96 மாத பஞ்சப்படியினை வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள இந்த பஞ்சப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. கர்ப்பிணி உள்பட 10 பேர் மயக்கம்!
அதுபோலவே ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்து தர வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7,850 வழங்க வேண்டும், வாரிசுதாரர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அனைவருக்கும் ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலனைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடைபெறும் என முன்னதாக சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டது.
அந்த தீர்மானத்தின்படி இதுவரை மூன்று கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்த போராட்டங்களால் எந்த பலனும் இல்லாத நிலையில், தற்போது 4வது கட்டமாக கும்பகோணம் மண்டல தலைமை அலுவலக வாயில் முன்பு, இந்த கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
மேலும், இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒன்று திரண்டு, கும்பகோணம் மண்டல தலைமையகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அம்மாநில மொழியைக் கற்பது அவசியம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்