தஞ்சாவூர் பெரியகோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் தஞ்சாவூர்: உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆனிமாதம் ஆண்டுதோறும் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெறும், அதைப்போல் இந்தாண்டும் இவ்விழா வெகு விமரிசையுடன் நேற்று (ஜீலை 2) மாலை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கணபதி பூஜையுடன் தொடங்கி சுவாமிக்கு கங்கணம் கட்டப்பட்டது. பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீ பெருவுடையாருக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் பின்னர் பட்டு சேலை, பட்டு வேட்டி அணிவித்து சுவாமிக்கு விவாஹ திருமாங்கல்ய வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்று சிறப்பு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பின்னர் 16 வகையான உபசாரங்கள் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், இனிப்பு வகைகள், பூ, தாம்பூலம், ரவிக்கை துணி ஆகிய பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை நால்வர் சன்னதியிலிருந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க கோயிலை சுற்றி வந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க:தீட்சிதர்கள் தாக்கியதாக அவதூறாக பதிவு:பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு சம்மன்!
இத்திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமணத்தடை, சர்பதோஷம், சந்தான பிராப்தி, நீண்ட ஆயுள், மாங்கல்ய தோஷம் நீங்கி உலக மக்கள் நலம் பெறுவர் என்பது ஐதீகம். இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, மேற்பார்வையாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண வைபவம்:ஸ்ரீ சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்தின் தத்துவமாக கூறப்படுவது யாதெனில், நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும், இறைவன் நித்திய கல்யாணசுந்தரர், இறைவி நித்திய கல்யாண சுந்தரி, மனிதர்கள் கணக்குப்படி ஓராண்டுக்கு ஒரு முறை இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்விப்பது என்பது தேவர்களது கணக்குப்படி நித்தமும் நடத்துவதாகும்.
இவ்வாறு நடத்துவதன் மூலம் சிவத்திடமிருந்து அம்பாள் பிரியாமல் இறைவனும் இறைவியும் வடிவம் கொண்டு அருள் செய்வதால் தான் பக்தர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடிகிறது. உலகில் உள்ள எவராயினும் தவத்திற்கு ஒப்பான வழிபாடு செய்தால் சிவபெருமான் அருள் புரிவார் என்பதே திருக்கல்யாண விழாவின் தத்துவமாகும்.
இதையும் படிங்க:ட்ரிங் ட்ரிங்... நெல்லை தேரோட்டத்தில் கவனத்தை ஈர்த்த 90’ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்!