தஞ்சாவூர்:தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகளார் கலந்து கொண்டு புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் ‘தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு’ என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இந்துக்கோயில்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் சிதலமடைந்து உள்ள சைவ, வைணவ ஆலயங்களை கண்டறிந்து, புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறையை கேட்டுக்கொள்வது, திருக் கோயில்களை சிறந்த முறையில் வழி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவநந்தி அடிகளார் கூறும்போது, "தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்த திருக்கோயில்கள் அந்தந்த மாநில அமைப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் இந்த அமைப்பு கொண்டு செல்ல பயன்படுகிறது என கூறினார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "கோயில் என்பது தாயின் கருவறை போன்றது, தாயின் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் அனைவரும் வழிபாடு செய்யும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை.. 308 பெண்கள் பங்கேற்பு!