தஞ்சை:குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூலை 27) திருச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின்னர் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில், பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு செய்யும் முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த முகாமில், விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்கிருந்த மகளிரிடம் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதில் ஏதாவது சிரமங்கள் இருக்கிறதா? பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா? என்று கேட்டறிந்தார்.