தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று (டிச.13) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நிலக்கரி ஒப்பந்தம் ஊழல், தொலைதொடர்பு துறை ஊழல் என ஊழல் மட்டுமே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி எம்பி தீரஜ் சாகு என்பவர் வீட்டில் ரூ.350 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை, இந்த நாட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, வருமானவரித்துறை சோதனை ஆகியவற்றில் இவ்வளவு பெரியத் தொகை அளவிற்கு பணத்தை பதுக்கி வைத்து கைப்பற்றப்படவில்லை.
ஊழலுக்காக உருவானது இந்தியா கூட்டணி?:எம்பி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எம்பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவர்களுடைய கூட்டணியே ஊழல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக கட்சி 2G ஸ்பெக்ட்ரம் தொலைதொடர்பு துறையில் ஊழல் செய்தது. அந்த விவகாரம் விசாரணைக்கு வர உள்ளது. விரைவில் தீர்ப்பு வந்து சிறைக்கு செல்வார்கள். தற்போது ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு, துரைமுருகன் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.