தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை - TN bjp chief annamalai Says Gopalapuram family is only family that is at peace under DMK regime

கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில், நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான், என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சாதாரண குடும்பத்தினருக்கு நிம்மதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை
திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை

By

Published : Jun 15, 2022, 10:15 AM IST

தஞ்சாவூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நேற்று (ஜூன்.13) கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது , "கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில், நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான், சாதாரண குடும்பத்தினருக்கு நிம்மதியில்லை, கடந்த ஒரு வருட காலத்தில் கூட்டு பலாத்காரம், கஞ்சா விற்பனை, கொடூர படுகொலைகள் அதிகரித்துள்ளது. தவறு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம், திமுக ஆட்சியில் காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

லாக் அப் மரணம் நடக்க காரணம் காவல்துறையினர் அல்ல, ஆட்சியாளர்கள் தான், தமிழ்நாடு அமைச்சர்கள் 30 ஆண்டுகளாக தங்களை நல்லவர்களாக மக்களிடம் காட்டி நடித்து வந்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் செய்த பழைய தொழில்கள் ஞாபகம் வருவது போல பேச தொடங்குகிறார்கள்.

இது அவர்கள் செய்த பழைய தொழிலான பிக்பாக்கெட், ரவுடி லிஸ்ட் தண்ணி லாரி ஓட்டுபவர்களாக இருந்தார்கள் என்பது காட்டுகிறது. அவர்களது பேச்சை பெண்கள் காது கொடுத்து கேட்க முடியாது. திமுக ஆட்சியாளர்கள் சினிமா குடும்பம் என்பதால் திடீர் ஆய்வு என்ற பெயரில் இரண்டு மூன்று சினிமா இயக்குநர்களை வைத்துக் கொண்டு சினிமா படப்பிடிப்பு போல நடத்துகிறார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 517ல் வாக்குறுதிகளில் 15 வாக்குறுதிகளைக் கூட அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக கும்பகோணத்தை 100 நாட்களில் மாவட்டம் ஆக்குவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் 400 நாட்களை கடந்த பின்னரும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்தால், கண்டிப்பாக, இதனை ஆன்மீக நகராக அறிவித்து, நாங்கள் மத்திய அரசின் வாயிலாக பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கிடைக்கச் செய்து சிறப்பு ரயில் உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். திமுகவின் ஓராண்டு கால நிறைவில், குறைந்தபட்சம் 120 வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இது குறித்து பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை கேட்டபோதும், திமுக தரப்பினர் இதுவரை வாய்திறக்கவில்லை. இவர்களுடைய ஊழல் வெளியே தெரியக்கூடாது, குடும்ப ஆட்சியை பற்றி மக்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில், மேகதாது அணை கட்டும் பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், ஒருபோதும் மேதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டமுடியாது என்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் (அதாவது 578 நாட்களில்) நாடு முழுவதும் புதிதாக 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதுபோலவே ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில், 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் விருப்பத்தின் பேரில் ராணுவத்தில் சேர்ந்து ஆண்டிற்கு ரூபாய் 4.5 லட்சம் முதல் ரூபாய் 6 லட்சம் வரை என்ற நல்ல சம்பளத்துடன் 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றலாம். அவர்கள் விருப்பப்பட்டால் அந்த பணியை தொடரலாம், 4 ஆண்டுகள் பணி முடித்த வீடு திரும்புவதாக இருந்தால், ரூபாய் 11 லட்சத்து 72 ஆயிரத்துடன் வீடு திரும்பலாம் என்பதும் அற்புதமான திட்டம்.

இதனையும் இன்றைய இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 2024ம் ஆண்டு 400க்கும் மேற்பட்ட எம்பிக்களுடன் பாஜக 3வது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். அதில் 25 எம்பிக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details