தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை விடுமுறை - தஞ்சை பெரிய கோவிலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்! - தஞ்சை பெரிய கோவில்

கோடை விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரிய கோயிலை கண்டு ரசித்தும், பெருவுடையாரை தரிசனம் செய்தும் செல்கின்றனர்.

Thousands
கோடை விடுமுறை

By

Published : May 16, 2023, 5:12 PM IST

தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தஞ்சை:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில், தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் - பெருவுடையார் கோவிலை பார்த்து ரசிப்பதற்கும், சுவாமியைத் தரிசனம் செய்வதற்கும், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் பிற மாநில சுற்றுலாத் தலங்களான மூணாறு, கேரளா, கர்நாடகா, மைசூர் ஆகிய இடங்களுக்கும் குடும்பம் குடும்பமாக மக்கள் சுற்றுலாச் செல்கின்றனர். அதேபோல், கோவில்களுக்கும் பொதுமக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி தஞ்சை பெரியகோவிலுக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தஞ்சை பெரிய கோயிலைக் காணவும், பெருவுடையார் மற்றும் மஹாநந்தியம் பெருமான், வாராஹி நடராஜர், வள்ளி தேவசேனா சமேத முருகர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் குவிந்து வருகின்றனர்.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரைத் தரிசனம் செய்து வருகின்றனர். பெரிய கோவிலைக் காண்பது மட்டுமின்றி அருகில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையையும் பார்வையிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கோவில் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் மணிமண்டபம், மனோரா, கல்லணை மற்றும் கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோவில்களில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கொடியேற்றம், நாட்டியாஞ்சலி, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, ராஜராஜ சோழன் சதய விழாவில் பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பேரபிஷேகம், தேர்திருவிழா, மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி விழா, கொலு பொம்மைகள் கண்காட்சி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது மஹாநந்தியம் பெருமானுக்கு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து மஹா நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகர சங்கராந்தி பெருவிழா உள்ளிட்டவை கொண்டாடப்படுகின்றன. இதேபோல் மாதந்தோறும் பிரதோஷ அபிஷேகம், பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம், நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம், கார்த்திகை மாத சோமவாரம் அபிஷேகம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ஊட்டியை கண்டு அஞ்சும் சுற்றுலாப் பயணிகள்.. விலை உயர்ந்த விடுதிக் கட்டணங்களால் அவதி

ABOUT THE AUTHOR

...view details