கும்பகோணம்: தாராசுரம் நேரு அண்ணா காய், கனி, இலை வியாபாரிகள் நல அறக்கட்டளை மூலம் நிதியாண்டு 2023-24ஆம் ஆண்டிற்கு கடை ஒன்றுக்கு ரூபாய் 6 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமல் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் நிதியாண்டுகளை விட, இதன்மூலம் மொத்தம் 2 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 2022-23ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிற்கான வாடகையாக 383 தரைக்கடை வியாபாரிகளும் தலா ரூபாய் 70 ஆயிரம் ஒப்பந்ததாரர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர். தற்போது 383 தரைக்கடை வியாபாரிகளிடமும் ஆண்டு வாடகையாக தலா ரூபாய் 80 ஆயிரம் உடனே செலுத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில், சில்லறை வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகள் 383 பேரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வியாபாரிகள் ஒப்பந்ததாரர்கள் நிர்பந்திக்கும் தொகையினை தங்களால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே, மாநகராட்சியால் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையினை 383 தரைக்கடை வியாபாரிகளும் மாநகராட்சியில் நேரடியாக தினமும் வாடகையாக செலுத்தத் தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.