தஞ்சை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனுக்கும், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ரவுடி குருமூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. கடந்த 5ஆம் தேதி மணஞ்சேரி வீரசோழன் ஆற்றங்கரை பகுதியில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது குருமூர்த்தி தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஆற்றங்கரை சுவர் சேதமடைந்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், முருகனும் குருமூர்த்தியும் தலைமறைவாகினர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உமாமகேஸ்வரபுரம் கிராம நிர்வாக அலுவலரும் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதை உறுதி செய்தனர்.
அதேநேரம் ரவுடி குருமூர்த்தி, பிருத்விராஜ் ஆகிய இருவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள ரவுடிகளிடம் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாக அவர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.