தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்க்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள் வீற்றிருந்து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தைப் பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமணக்கோலத்தில் ஸ்ரீ நாகவல்லி, நாக கன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகு தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஸ்ரீராகு பகவான் மஹாசிவராத்திரி நன்னாளில் 2ஆம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிபட்டால், சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.