தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலில் திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்க்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீ கிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள் மற்றும் கலைமகள் வீற்றிருந்து பணி செய்ய, சக்கர பீடத்தின் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று ராகு பகவான் தனிக்கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் ராகுபகவான் திருமணக் கோலத்தில் ஸ்ரீ நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இவருக்குப் பால் அபிஷேகம் செய்வித்தால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் ராகுபகவான் மஹாசிவராத்திரி நன்னாளில், 2ஆம் காலத்தில் நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார். அந்த வகையில், இத்தகைய பெருமைமிகு தலத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம், ஐந்து தலை நாகம், கைலாச வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.