தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தில் பழமை வாய்ந்த பைரவேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பூவுலகில் முதலில் பைரவர் தோன்றிய ஸ்தலமாக போற்றப்படும் இங்கு, அஷ்டமி திதி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பைரவர் மற்றும் பைரவி வழிபாட்டிற்கு சிறப்பான நாட்களாக கூறப்படுகிறது.
மகா பைரவேஸ்வரருக்கு ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, கோரோஜனை, ஜாதிக்காய், அத்தர், பச்சை கற்பூரம், ஜாதிபத்தி ஆகிய 8 அஷ்டசக்தி திரவியங்களை கூடிய அரைத்த சந்தனத்தைக் கொண்டு பஞ்சகல்பகாப்பு அபிஷேகம் செய்வித்து, வழிபடுவது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்றும், பகைமை நீங்கி, இல்லறம் சிறக்க, வணிகத்தில் மேன்மை பெற, எதிரிகளிடமிருந்தும், துன்பங்களில் இருந்தும் காக்கும் வல்லமை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிகு தலத்தில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினமான மகா பைரவாஷ்டமி என்ற பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்றிரவு மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவேஸ்வரியான மகா பைரவிக்கும், விசேஷமாக வேறு எந்த தலத்திலும் காண முடியாத திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.