கொடியேற்றத்துடன் தொடங்கிய மார்கழி மாத தெப்பத் திருவிழா தஞ்சாவூர்: உலகப் பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக விளங்கும் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோயில் மார்கழி மாத முக்கோடி தெப்பத் திருவிழாவானது இன்று (டிச.16) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயிலில் அமைந்துள்ளது வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், உலகப் பிரசித்தி பெற்ற கல் கருட தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் மார்கழி மாத முக்கோடி தெப்பத் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முக்கோடி தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொள்வர். அதேபோல இந்த ஆண்டும் கொடியேற்றமானது நடைபெற்றது. இன்று காலை கொடிமரம் அருகே, உற்சவரான சீனிவாச பெருமாள் சமேத வஞ்சுளவள்ளி தாயார் விசேஷ பட்டு வஸ்திரங்கள் கூடிய சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதையும் படிங்க: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக 10 நாட்களில் 86ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்...!
தொடர்ந்து பட்டாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, கருட உருவம் வரையப்பட்ட கொடியை பட்டாச்சாரியார்கள் கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையானது காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் தொடர்ந்து வரவுள்ள விழா நாட்களில், காலை, மாலை என இரு வேளைகளிலும், சூரிய பிரபை, யாழி வாகனம், கிளி, சேஷா வாகனம், அனுமந்த வாகனம், கமல வாகனம், வெள்ளி யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
- விழாவில் முக்கிய நிகழ்வாக 4 ம் நாளான கல் கருட சேவை வருகிற 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
- அதனைத் தொடர்ந்து 8ம் நாளான வைகுண்ட ஏகாதசி தினமான 23ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
- தொடர்ந்து 9 ம் நாளான 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பெருமாள் தாயார் நிலை தெப்பத்தில் (அசையா தெப்பம்) எழுந்தருளத் தெப்போற்சவம் நடைபெறும்.
- பிறகு, 25ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான மார்கழி மாத தெப்போற்சவம் நிறைவு பெறும்.
இதையும் படிங்க: ஈரோட்டில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஐயப்ப பிரதிஷ்டை நிகழ்ச்சி…ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு!