சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் நடந்த பகீர் சம்பவம்! தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டு பெருவிழா 6 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல 182-வது ஆண்டு பெருவிழா கடந்த பிப்.17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக மாசி மாத சிவராத்திரியை ஒட்டி வரும் அமாவாசை தினமான நேற்று (பிப்.20) மாலை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் வேல் சகிதமாக விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது பிராத்தனைகளை நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.
அப்போது தீ மிதித்த முதியவர் ஒருவர் தடுமாறி தீ குண்டத்தில் தவறி விழுந்தார். தீயில் தடுமாறி விழுந்தவரை அருகில் இருந்த சக பக்தர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். அவருக்கு முகம் மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தாராசுரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து இரவு நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க அழகிய மின்னொளியில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் இன்று (பிப்.21) மாலை புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவமும், நாளை (பிப்.22) ஆம் தேதி ஸ்ரீ தர்மர் பட்டாபிஷேக வைபவமும் நடைபெற்று இவ்வாண்டிற்கான திருவிழா நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இலவச கல்வி பெற சிக்கல்! என்ன காரணம்?