தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் நெய்குப்பை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை இல்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
சுடுகாட்டிற்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால், மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக்கொண்டு ஆற்றில் இறங்கி தான் செல்ல வேண்டும்.
தண்ணீர் இல்லாத நாட்களில் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் செல்லும் போது உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த மணி என்ற முதியவர் நேற்று உயிரிழந்தார். தற்போது மண்ணியாற்றில் தண்ணீர் செல்வதால், அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை எடுத்துச் சென்றனர்.