400 ஆண்டுகளை கடந்து கம்பீர காட்சியளிக்கும் 'ராஜகோபால பீரங்கி' தஞ்சாவூர்: பாரம்பரிய சிறப்புமிக்க பெரிய கோயில், ஆசியாவின் பழமையான சரஸ்வதி மகால் என எத்தனையோ சிறப்புகளைக் கொண்டுள்ளது, தஞ்சாவூர். அவற்றின் வரிசையில் தனக்கென இன்றியமையாத இடத்தை பிடித்து நிற்கிறது, 'ராஜகோபால பீரங்கி'.
இங்கு மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், நகரின் மையப்பகுதியில் பெரிய கோட்டை ஒன்றிருந்தது. நான்கு புறத்திலும், மதில் சுவரெழுப்பப்பட்ட கிழக்குப் பகுதியான வெள்ளை பிள்ளையார்கோயில் அருகே 'பீரங்கி மேடு' என்ற இடம் உள்ளது.
இந்த இடத்திலுள்ள தேனிரும்பு பட்டைகளால் வார்த்து செய்யப்பட்ட பீரங்கி தான், 'ராஜகோபால பீரங்கி'. இதனால் தான், இப்பகுதிக்கு 'பீரங்கி மேடு' எனப் பெயர் வந்தது. பொதுவாக, பீரங்கிகள் வார்ப்பு இரும்பினால் தான் செய்யப்படும். ஆனால், இந்த பீரங்கியோ அப்படியல்ல; இவை முற்றிலும் தேனிரும்பு பட்டைகளால் செய்யப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 400 ஆண்டுகளைக் கடந்து கம்பீரத்துடன் காட்சியளிக்கும் இந்த பீரங்கியானது, கி.பி.1600-1645ஆம் ஆண்டுகளில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. தஞ்சாவூருக்கு சுற்றுலா செல்லுவோர் தவறாமல் பார்க்கக் கூடிய வரலற்றுச் சிறப்பு கொண்ட இடமாக இந்த பீரங்கி மேடு உள்ளது.
இந்த பீரங்கி குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய கரந்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், 'தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய 'பீரங்கி' பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பீரங்கி உள்ள இடத்திற்குப் பெயர் 'பீரங்கி மேடு' என அழைக்கப்படுகிறது.
39 தேனிரும்புகளால் ஆனது:பீரங்கி என்றாலே குழாய்களை அச்சில் வார்த்தெடுப்பது தான் வழக்கம். ஆனால், இந்த பீரங்கி அந்த ரகம் அல்ல, அதிக கணமுடைய 26 அடி நீளமுள்ள மூன்று (அ) நான்கு விரல்கள் அகலமுள்ள 39 தேனிரும்பு பட்டைகளை பழுக்க காய்ச்சி ஒன்றோடு ஒன்று ஒட்டவைத்து, உருளை வடிவில் உருவாக்கி இருக்கிறார்கள்.
26 அடி நீளத்தைக் கடத்த நீளும் இரும்பு பட்டைகளை பீரங்கி வாயின் வெளிப்புறமாக மடக்கி விட்டுள்ளனர். பீரங்கி குழாயின் மேல் ஐந்து இடங்களில் இணைப்பு வளையங்களையும் பொருத்தியுள்ளனர். பீரங்கி குழாயின் பின்புறம் அழகுற செய்து முழுவதுமாய் மூடி, திரி பொருத்துவதற்காக ஒரு துளையினையும் அமைத்திருக்கிறார்கள்.
ஆசியாவிலேயே முதலிடத்தில் இருக்கவேண்டியது:இதன் எடை 27 டன் ஆகும். பீரங்கியை, தஞ்சாவூரை அடுத்த மனோஜிபட்டியில் கொல்லர்கள் தயாரித்து, ஏழு கிலோமீட்டர் தூரம் எடுத்துவந்து இந்த குன்றின் மேல் ஏற்றி வைத்து, மூன்று சிறு மேடைகளில் மேல் ஏற்றி வைத்துள்ளனர். உலகில் உள்ள பழைய பீரங்கிகளிலேயே இந்த ராஜகோபால பீரங்கி ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஆனால், பழமையினாலும் செய்யப்பட்ட விதத்தினாலும் முதல் இடத்தில் இருக்க வேண்டிய பீரங்கி, இந்த தஞ்சாவூர் பீரங்கி தான்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த பீரங்கி மேட்டின் சிதைந்துபோன, மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் தற்போதும் காட்சியளிக்கின்றன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இது உள்ளது. தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்த இந்த பீரங்கி கடும் வெயிலிலும் மழையிலும் துருப்பிடிக்காமல் அதன் பழமை மாறாமல் இன்றும் காட்சியளிக்கிறது. இந்த பீரங்கிக்கு 'ராஜகோபால பீரங்கி' என்ற பெயரானது, மன்னர் தான் வணங்கும் தெய்வமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி பெயரை, தனது நாட்டை காக்க உருவாக்கப் பெற்ற பீரங்கிக்கு சூட்டியுள்ளதாக வரலாறு கூறுகிறது.
இதையும் படிங்க:நீரிழிவு நோய்க்கு குட் பை..! இதோ பக்க விளைவுகள் இல்லா சித்த மருந்துகள்..