தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். தனது மூன்று மகள்களில் இருவருக்கு திருமணம் முடித்து வைத்த செல்வம், தனது கடைசி செல்ல மகளின் திருமணம் நடக்கும் முன்பாகவே எதிர்பாராதவகையில் கடந்த 2012ஆம் ஆண்டு காலமானார். இல்லத்தின் ஆலமரமாக விளங்கிய செல்வத்தின் திடீர் மறைவால் நிலைகுலைந்தது அவரது குடும்பம். குறிப்பாக அவரது கடைசி மகள் லட்சுமி பிரபாவுக்கு தந்தையின் பிரிவு பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் இறங்கினர். நாள் குறித்து அழைப்பிதழ் அச்சிட்டு உற்றார், உறவினர் என அனைவரையும் சென்று அழைத்தனர். திருமண நாளும் வந்தது. அனைவரும் வந்தனர். இருப்பினும், தந்தை செல்வம் இருந்து தனது திருமணத்தை பார்க்க முடியவில்லையே என்ற எண்ணம் மட்டும் மணமகள் லட்சுமி பிரபாவுக்கு மறையாத சோகமாக இருந்துள்ளது. அவரது ஏக்கத்தை அறிந்த சகோதரிகள் இன்ப அதிர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்த தங்களது தந்தை செல்வத்தை மணமகள் முன் வந்து மணமேடையில் நிறுத்தினர்.
ஆம். மறைந்த செல்வத்தை தத்ரூபமாக சிலையாக வடித்து மணமகள் முன் வந்து நிறுத்தியதும் அனைவரும் ஒருகணம் ஆடிப்போயினர். ஓடிவந்து செல்வத்தின் சிலையை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின்னர், நலமுடன் தாய், சிலையாக தந்தை முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.