தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை பககுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. நாட்டுப் படகின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக தஞ்சை கடற்கரையையொட்டிய பகுதிகளில் காரைக்கால், பாண்டிச்சேரி பகுதி மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரேஸ் மடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால், கடலில் மீன்வளம் குறைந்து போவதோடு நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் விரித்து வைத்திருக்கும் வலைகளையும் இந்த விசைப்படகுகள் அறுத்து செல்கின்றன.
அதனோடு வலைகளை இழந்து தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரணமாக ஒரு வலையின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதால் புதிதாக வலை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வலைகள் இல்லாததால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.