தஞ்சாவூர்:கும்பகோணம் ஆழ்வான்கோயில் தெருவைச் சேர்ந்தவர், சதீஷ். இவர், டீத்தூள் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார். 2 மாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர் கீழ் தளத்தில் தனது அலுவலகத்தையும், மேல் தளத்தில் தனது குடியிருப்பாகவும் பயன்படுத்தி வருகிறார்.
இவர் வீட்டின் போர்ட்டிகோவில் தனது கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார். இன்று (மே.01 ) காலை திடீரென போர்ட்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடிக்கத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாடி வீட்டில் இருந்த சதீஷ் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், இரு வாகனங்களில் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் இருக்க சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இதற்குள் அந்தப்பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே சதீஷ் குடும்பத்தினர் நல்வாய்ப்பாக பக்கத்தில் இருந்த வீட்டிற்கு மாடி வழியாக ஏறி குதித்து உயிர் தப்பினர்.