தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் 'ஸ்ரேஷ்த பாரத் சன்ஸ்கிருதி சமாஹம்' என்ற இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகளின் சங்கம விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , கலைஞர்கள் நாட்டின் அளப்பறிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் இதுபோன்ற விழாக்கள் நாட்டின் பல்வேறு கலைகளை போற்றி பாதுகாக்கும் என்றார். கலைஞர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த விழாக்கள் அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இளம் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், மெருகேற்றிக் கொள்வதற்கும் மேடையாக பயன்படுகிறது என்றார்.
தஞ்சாவூரை கலைகளின் பொக்கிஷமாகவும், தஞ்சை பெரியகோயிலை தட்சிணமேரூ என்றும் அழைப்பது வியப்புக்குறிய ஒன்று அல்ல என்று தெரிவித்த ஆளுநர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டடக் கலைகளின் நுணுக்கங்களைத் தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான ஒரு சான்றாக இன்றளவும் சோழர்கள் கட்டிய இந்த வரலாற்றுச் சின்னம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.
தஞ்சையில் கலைகளின் சங்கமத் திருவிழாவை தொடக்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சோழர்கள் காலத்துக்குப் பிறகே இசை இப்பகுதியில் தழைத்தோங்கியது என்றும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தமிழ் இசைக் குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் பரவலாக கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். ஆறாம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழ்நாட்டில் தழைத்தோங்கியதாகவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர் ஆகியோர் பக்தி இசை மூலம் தமிழ் இசைத் தழைத்தோங்கியது என்று ஆளுநர் கூறினார். இதுபோன்ற கலைகளை கலைஞர்கள், கலைநிறுவனங்கள் மேலும் மேம்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.