தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையில் உள்ள மீன்பிடித் தளங்களில் கடலில் தொடர்ந்து 15 தினங்களாக அதிவேக சூறைக் காற்று வீசி வருவதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வீசும் சூறைக் காற்று: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! - நாட்டுப்படகு மீனவர்கள்
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிவேக சூறைக்காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாட்டிகல் மைல் தொலைவிலேயே மீன் பிடித்து வருகின்றனர். விசைப்படகு மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மட்டும்தான் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிக்க முடியும். நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டுமென்றால் கடலில் இயல்பான சூழ்நிலையில் இருந்தாலொழிய, அதிவேக காற்றோ, அதிவேக அலையோ வீசினால் மீன் பிடிக்க முடியாது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசி வருவதோடு அடிக்கடி கடல் உள்வாங்குவதும் வெளியேறுவதும் என இருந்து வருகிறது. இதனால், நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 15 தினங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, இச்சூழலில் இதுபோன்ற இயற்கை இடர் இடர்பாடுகள் உள்ள காலங்களிலும் அரசு நிவாரணம் தரவேண்டுமென நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.