தஞ்சாவூர்: தற்போதைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் ரசாயன கலப்பில் உருவாக்கப்பட்டதாக உள்ளது. தற்போது இந்த ரசாயன பயன்பாட்டிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அதில் உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் கூந்தல், தோல், பல் மற்றும் உடல் சார்ந்த பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் ரசாயனத்தை தவிர்த்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு சமீப காலத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிபாளையம் சாலை அருகே உள்ள விஜய நகரில், வசீகர வேதா என்ற பெயரில் தூய மூலிகை தொழிற்சாலையை விஜயாமகாதேவன் என்ற பெண்மணி நடத்தி வருகிறார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு 60க்கும் மேற்பட்ட பொருள்களை தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் மாதத்திற்கு சுமார் 5 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் 40 பேருக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஜயாமகாதேவன் கூறுகையில், "தனது அம்மா சொல்லிக் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு வீட்டிலேயே தலைக்கு தடவப்படும் கருவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி கலந்த எண்ணெய் , ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள், கூலாங்கிழங்கு, வெட்டிவேர், பாசிப்பயிர் கலந்த குளியல் பொடி போன்றவற்றை தயார் செய்து தங்களது வீடுகளில் பயன்படுத்தினோம். பின்னர் வீட்டு பயன்பாட்டுக்கு போக நண்பர்கள், உறவினர்களுக்கு அவற்றை தயார் செய்து கொடுத்ததால், நாளடைவில் இந்த இயற்கை பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் பொறியியல் பட்டதாரிகளான தனது மகன்கள் கார்த்திகேயன், சுரேந்தர் அளித்த ஆலோசனையின் பேரில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் மூலிகை பொருட்களை எப்படி தயாரிப்பது என்கிற செய்முறை விளக்கத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்தோம். இதற்கு வட மாநிலங்களில் இருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் இப்பொருட்களை வாங்க நிறைய ஆர்டர்கள் வந்ததால் படிப்படியாக விற்பனையும் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகளை சுமார் 40 பேரை வேலைக்கு அமர்த்தி, வாடகைக்கு வீடு எடுத்து இயந்திரங்கள் நிறுவி சோலார் பேனல் அமைத்து இப்பொருட்களை தயார் செய்து வருகின்றோம்" என தெரிவித்தார்.