தஞ்சாவூர்: இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ளது தான் பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ போன்ற பத்ம விருதுகள். இந்த பத்ம விருதுகள் அரசியல், நடனம், நாடகம், இசை, ஓவியம், சிற்பம், கலாச்சாரம், சட்டம், சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கவுரவிக்க வழங்கப்படும். குறிப்பாக ஜனாதிபதி மாளிகையில் இந்த விருது அரசால் வழங்கப்படும். இத்தகைய விருதினை வாத்திய கலைஞர்களுக்கு வழங்கிட வேண்டும் என்கிறார் பிரபல தவில் வித்வான்.
தஞ்சாவூரில் வசித்து வருபவர் பிரபல தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜன். இவருக்கு வயது 70. இவருக்கு 2021ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருது, பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்முவால் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் தவில், நாதஸ்வர வித்வான்கள், இசைக் கலைஞர்கள் என ஒன்று சேர்ந்து டி.ஆர். கோவிந்தராஜனுக்கு மலர் மகுடம் சூட்டி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாத்திய வித்வான்களுக்கும் பத்ம விருதகள் வழங்க வேண்டும் என்று தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜ கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தவில் வித்வான் டி.ஆர் கோவிந்தராஜன் கூறும்போது, சிறு வயதில் குருகுலவாச முறைப்படி தவில் இசை கற்றுக்கொண்டு, பழம்பெரும் தமிழ் வித்வான்களுடன் இணைந்தும் தனியாகவும் 60 ஆண்டுகளாக பல்வேறு இசை கச்சேரிகள் நடத்தி உள்ளதாகவும், திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் விரிவுரையாளராக 24 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், தமிழக அரசின் கலைமாமணி விருது 1982- 83 ஆண்டுகளில் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தான் பெற்ற மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதினை தனது குருவான நாச்சியார் கோவில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை உள்ளிட்ட தவில் இசை வித்வான்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.