தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுகுந்த குந்தளாம்பிகை உடனுறை சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் புன்செய், நன்செய் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் சுமார் 147.84 ஏக்கர் பரப்பு நிலத்தினை சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாகவும், கடைகளாகவும், வீட்டுமனையாகவும் பல ஆண்டுகாலம் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனையறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், கோவில் நிலங்களை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகளிடம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா (கூடுதல் பொறுப்பு) அவர்களின் தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில், கோவில் தக்கார் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று (மே 17) கோவிலின் நிலங்கள் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக நிரந்தர அறிவிப்புப் பலகை கோவில் வளாகத்தில் வைத்தனர்.
அந்த அறிவிப்பு பலகையில் சூரக்கோட்டை வருவாய் கிராமத்தின் பட்டா எண் 6ல் உள்ள புன்செய் நன்செய் மற்றும் திருக்கோவில் புறம்போக்கு நிலம், சூரக்கோட்டை கிராமம் சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இத்திருக்கோவில் நிலங்களில் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பலகை வைத்து, கோவில் நிலத்தின் புல எண் வகைப்பாடு மற்றும் பரப்பளவு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.