தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடைத் திருநாளாகவும், உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், தமிழர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் நெருங்கும் நாட்களில் சமத்துவப் பொங்கல் விழாவாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், முன்கூட்டியே பொங்கல் கொண்டாடப்படும்.
இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசல் முன்பு மாக்கோலமிட்டு, புது மண் பானையில் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியில் பொங்கல் வைத்து, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை வைத்து சூரிய பகவானுக்கு படைத்து உற்றார், உறவினர்கள் சூழ குடும்பத்தினர் ஒன்றாக சூரியனை வழிபட்டு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழா கொண்டாடப்படும்.
ஆனால் தற்போது காலம் மாறிய நவீன யுகத்தில் கேஸ் அடுப்பு, குக்கர், சில்வர் பாத்திரம் போன்றவற்றின் வருகையால், மண் பானையில் பொங்கல் வைப்பதே அரிதாகிப் போய்விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்றும் பழமை மாறாமல் மண் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். காலப்போக்கில் அவையும் மாறலாம்.
இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த குடும்பங்கள் மட்டுமே, பொங்கல் பானை மற்றும் மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.