தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூர் அருகே கடத்தி செல்லப்பட்டவர், சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

By

Published : Oct 20, 2022, 3:34 PM IST

தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையில் பணத்திற்காக அத்தை மகன் ஒருவரை, அவரது மாமன் மகன் கடத்தி சென்றநிலையில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்: புலவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்மோகன்(40) என்பவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றை நிர்வகித்தபடியே அங்கு வசித்து வந்தார். ஹரித்துவார்மங்கலத்தைச் சேர்ந்த இவரது மாமன் மகன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய செல்வகுமார்(38) ராஜ்குமாரிடம் சில நாட்களாக மிரட்டி பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

காரில் கடத்தி சென்ற கும்பல்: முன்னதாக, குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் சிறையிலிருந்த செல்வக்குமார், நான்கு நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்ததைத் தொடர்ந்து, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

இதனிடையே, பணம் தர மறுத்த ராஜ்மோகன் நேற்று (அக்.19) துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைக் கவனித்த செல்வகுமார் சிலருடன் கூட்டமாக வந்து உடன் இருந்த ராஜ்மோகனின் நண்பரைக் கீழே தள்ளிவிட்டு காரில் கடத்திச் சென்றுள்ளார்.

ராஜ்மோகனின் நண்பர் அளித்த தகவல் அடிப்படையில் ராஜ்மோகனின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் கடத்தப்பட்ட ராஜ்மோகனையும், கடத்தியவர்களையும் வலைவீசித் தேடி வந்தனர்.

கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு:இதனிடையே, திருவாரூர் மாவட்டம் அவளிவநல்லூர் அருகே நேற்று (அக்.19) உடலில் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அறிந்த ராஜ்மோகனின் குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு ராஜ்மோகன் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.

தீவிர விசாரணையில் போலீசார்:இச்சம்பவம் தொடர்பாக, அவளிவநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள செல்வகுமாரையும் வலைவீசித் தேடி வருகின்றனர். பணத்திற்காகத் தனது அத்தை மகனைக் கடத்தி கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பன உள்ளிட்ட பலகோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காரில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

இதையும் படிங்க:திருச்செந்தூர் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் - பத்திரப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details