தஞ்சாவூர்: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் போக்குவரத்து காவலர்கள் அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விதமாக வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு போலீசார் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர்.
இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு ஊக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் காவல்துறை டிஎஸ்பி நீலகண்டன், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டோக்கனை வழங்கினர். அதைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் திருவள்ளுவர் தினம் என்பதால் திருக்குறள் ஒன்று சொல்லி தங்களது வாகனங்களுக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு சென்றனர்.