தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் அளித்த பேட்டி தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசாமி கோயில் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஜூலை 18) காலை தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் கட்சி நிர்வாகிகளுடன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கருப்புச் சட்டை அணிந்து இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சதீஷ்குமார், “தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கர்நாடகாவின் காவிரி நீர், இலங்கை மீனவர் பிரச்னை அடுத்து ஜல்லிக்கட்டு இவற்றை வைத்தே அரசியல் செய்து வருகின்றனர். பாரத பிரதமர் இந்த மூன்று பிரச்னைகளையும் சத்தமின்றி சுமூகமாக தீர்த்து வைத்த நிலையில், தற்போது மீண்டும் கர்நாடாக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவோம் என்ற பேச்சால் இப்பிரச்சனை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடகா அரசு ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். ஜூலை 17ஆம் தேதி எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க, பெங்களூரு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது பிரச்னை குறித்து இதுவரை எதுவும் பேசாமல் உள்ளார். இதனை கண்டித்தே பாஜக நிர்வாகிகள் அனைவரும் இன்று கருப்பு சட்டை அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. முக்கியமாக இதில் முதலில் பாதிக்கப்படப்போவது, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்தான். அதனால், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கர்நாடக அரசுடன் பேசி மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் முடிவை தடுத்து நிறுத்திட வேண்டும்.
மேகதாது பிரச்னைக்காகவே, இன்று நாங்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்தள்ளோம். அதுமட்டுமல்லாமல், அடுத்ததாக கருப்பு பலூன்களை பறக்க விட்டு எங்களது எதிர்ப்பினை பதிவு செய்வோம்” என்றார். மேலும், வருகிற 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இதே மேகதாது பிரச்னையை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
அது மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும், கும்பகோணம் மாநகராட்சியில் மிகப்பெரிய முறைகேடுகளும், மோசடிகளும் அரங்கேறி வருகிறது என்றும், வீட்டு வரி விதிப்பு மற்றும் வரி வசூலிப்பிலும் பெரும் குளறுபடிகள் உள்ளது என்றும் பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது - பொன் ராதாகிருஷ்ணன்