தஞ்சையில் நாச்சியார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! தஞ்சாவூர்:சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தில் எட்டு கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணா ஹதியுடன் இன்று நிறைவு பெற்று, மகா தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கடங்கள் புறப்பாடும், அதனையடுத்து உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னத்தில் மூலவர் விமானம் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த கும்பாபிஷேகத்தின்போது மதங்களைக் கடந்த மனித நேயத்தோடு இஸ்லாமிய பெருமக்கள் ஜமாஅத் அமைப்பு சார்பில், கும்பாபிஷேகம் காண வந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக பிஸ்கட் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர்.
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 14வது திவ்ய தேசமாகும். இங்கு ஆண்டிற்கு இரு முறை மட்டும் மார்கழி மற்றும் பங்குனியில் திருவீதி உலா நடைபெறும். இங்கு கல்கருட பகவான் மிகப்பெரிய சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால், இது பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.
இந்த கோயில் கி.பி 5ஆம் நூற்றாண்டில், கோச்செங்கணன் எனும் சோழ மன்னனால் கட்டப்பட்ட வைணவ தலமாகும். அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறு ஆகியவற்றுக்கு இடையே அமையப் பெற்றுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புடைய இந்த கோயிலைப் போற்றி திருமங்கையாழ்வார் நூறு பாசுரங்கள் போற்றி பாடியுள்ளார்.
மேதாவி மகரிஷி லட்சுமி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றும், அவரை தேடி வந்து பெருமாள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தவமிருக்க, அவர் தவமிருந்த வஞ்சுள மரத்தின் கீழ் மகாலட்சுமி குழந்தையாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு மேதாவி மகரிஷி வஞ்சுவள்ளி என பெயர் சூட்டி வளர்க்க, சில காலம் கழித்து பெருமாள் வாக்களித்தபடி, மானுட ரூபத்தில் வந்து வஞ்சுளவள்ளியை மணம் முடித்து, இரு கரத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
இத்திருமண வைபவத்தை மகரிஷியின் வேண்டுகோளின்படி, பிரம்மன் நடத்தி வைத்துள்ளதாகவும், எனவே இங்கு பெருமாள் திருமண கோலத்தில் தாயாருடன் அருள்பாலிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு சிறப்பான ஸ்தல கல்கருடன், ஆறு கால பூஜையுடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் இவர், தனது திருமேனியில் நவசர்பங்கள் தரித்து, நவக்கிரக தோஷம் நிவர்த்தி செய்பவராகவும் விளங்கியதாக கருதப்படுகிறது. மேலும், ஆண்டிற்கு இருமுறை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாவில் மட்டும் திருவீதியுலா கண்டருள்வார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்!