Thanjavur: தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய மேயர்! தஞ்சாவூர்:இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய தஞ்சாவூர் மேயரை அப்போது, யாரென தெரியவில்லை என வாகன ஓட்டி கூறியதால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றால் முதல் தடவை ரூபாய் ரூ.1000 அபராதம் விதிக்கவும், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாநகராட்சி மேயர் ராமநாதன் இலவசமாக சுமார் 50 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை அறிவுறுத்தினார்.
தஞ்சாவூரில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையிலும், விபத்தில்லா தஞ்சாவூர் மாவட்டத்தை உருவாக்கும் வகையிலும், மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன பேரணி மற்றும் தனியார் அமைப்புடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வந்தால் இனிப்பு வழங்குதல், வெள்ளி நாணயம் வழங்குதல், பெண்களுக்கு புடவை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த மாதங்களில் நடைபெற்றன.
அதேபோல், தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மேயர் ராமநாதன் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தஞ்சாவூர் பெரியகோயில் சாலையில் இன்று (ஜூலை 17) ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு புதிய ஹெல்மெட்டை அவர்கள் கையில் கொடுத்து தலையில் அணியுமாறு கூறியும் ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
இதனிடையே, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தூரத்தில் இருந்து பார்த்தபடி போலீசார் அபராதம் விதித்துக் கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டு பலர் வந்த வழியே திரும்பிச் சென்ற நிகழ்வும் நடந்தது. மேலும், ஹெல்மெட்டை வண்டிக்குள் வைத்திருந்த மகளிர் போலீசார் ஹெல்மெட் எங்கே என்று கேட்டதும் அதை வெளியில் எடுத்து தங்களது தலையில் மாட்டிக்கொண்டு சென்றனர். ஒரு சிலர் அங்கு வந்தபோது அவர்களிடம் 'இனிமேல் நீங்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டது.
அப்போது அங்கு வந்த பெண் வாகன ஓட்டியிடம் மேயரை காட்டி, ’இவர் யார் எனத் தெரியுமா?’ என போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கேள்வி கேட்க, இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த அந்தப் பெண் 'தெரியாது' என்று பதில் கூற, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் 'இவர் மேயருமா.. தஞ்சாவூரில் போஸ்டர் அடிச்சி ஒட்டி இருக்கே..' என சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது. கடந்த 14ஆம் தேதி மேயர் ராமநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Dindigul:சுற்றுச்சூழலை காக்க விதையுடன் கூடிய 'பேப்பர் பேனா'... அசத்தும் திண்டுக்கல் இளைஞர்!