தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ரூ.73 கோடி மதிப்பில் ஆழ்துளை நீர் உறிஞ்சும் கிணறு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தஞ்சை மாநகராட்சியில் வருகிற 30 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கு நடைபெற்று வரும் பணியினை மாநகராட்சி மேயர் ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக ஆய்விற்கு வந்த மேயர், சரியான நேரத்திற்கு ஆணையர் வரவில்லையா என அலுவலர்களிடம் கேட்டார்.
ஆணையர் அப்போது வரவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் காத்திருந்து பொறுமை இழந்த மேயர், அங்குள்ள கட்டிட இரும்புக் கம்பிகள் மீது போய் உட்கார்ந்தார். சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக வந்த ஆணையர் மகேஷ்வரி, காரில் இருந்து இறங்கி வந்து வேகமாக மேயரை நோக்கிச் சென்றார். பின்னர், “இவ்வளவு லேட்டாவா வருவீங்க?” என ஆணையரிடம் கடிந்து கொண்டார்.
மேம்பாட்டு பணிகள்:பின்னர் இருவரும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து மேயர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.73 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளை நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்தோம். இந்த பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைந்து விடும். இதன் மூலம் 18 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும்.