தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டி பாளையம் பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன.
அதேபோன்று மாடுபிடி வீரர்களும் வந்தனர். போட்டி தொடங்கும் முன்பு வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் போட்டியில் பங்கேற்க உடல் தகுதியுடன் உள்ளனரா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று காளைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
இதனையடுத்து தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் 800 காளைகளும், 417 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். வாடி வாசலில் துள்ளி குதித்த இளைஞர்களை காளைகள் அலறவிட்டன.
இளைஞர்களை அலறவிட்ட காளைகள். அதேபோன்று மாடு பிடி வீரர்கள் லாவகமாக காளைகளை அடக்கியும் பரிசுகளை வென்றனர். இந்த போட்டியில் பிரிட்ஜ், டிவி, சைக்கிள், குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 15க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:திமுக சார்பில் தங்க கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி