தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வேளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் சாலையோரேத்தில் நெல்லை மலைமலையாக கொட்டிவைத்து வருகின்றனர்.
தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். முள்ளுக்குடி, கூத்தனூர், சூரியமூலை ஆகிய பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய திருப்பனந்தாள் ஊராட்சியில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி ஆகியவை பயிரிட்டு தற்போது அறுவடையும் நடைபெற்றுவருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை அறுவடை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளைச் சாலையோரத்தில் கொட்டிவைத்து விவசாயிகள் கடந்த 20 நாள்களாக காத்துக்கிடந்து தவித்துவருகின்றனர். கடந்த ஆண்டு 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது பெய்த பருவ மழையால் கூடுதலாக சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், அதனைக் கொள்முதல் செய்ய தங்கள் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மழை பெய்தால் சாலையோரம் கொட்டிவைத்துள்ள நெல் மணிகள் முளைத்து வீணாகி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் எனக் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், கடன் வாங்கி பயிர்செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரம் வீணாவதைக் கண்டு மனம் நொந்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!