பொங்கலன்று சிரேஸ்சத்திரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டின், தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சூர்யா என்பவர் உள்ளிட்ட நான்கு பேருக்கும், இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்ட சக்திவேல் என்பவர் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்துவைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சமாதானமாகாத அந்தக் கும்பல் செபஸ்டியன், சதீஷ்குமார், சக்திவேல் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த செபாஸ்டின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து சதீஷ்குமார், சக்திவேலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சிகிச்சைப் பலனின்றி சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சக்திவேல், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல் நிலைய காவலர்கள், கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடைபெற்ற சம்பவ இடம் - தஞ்சாவூர் அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டின்போது செபாஸ்டின் நண்பர்களுக்கும் சூர்யா நண்பர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் செபாஸ்டின் நண்பரான மணிகண்டனை சூர்யாவின் நண்பர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த முன்விரோதம் பல நாள்களாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செபாஸ்டின், சதீஷ்குமார் ஆகிய இருவரும் பொங்கலன்று டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருக்கும் தகவலறிந்து அங்கு சென்ற சூர்யா, அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, செல்வகுமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் செபஸ்டின், சதீஷ்குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் செபாஸ்டின், சதீஷ்குமார் ஆகியோரை சூர்யா குழுவினர் வெட்டியுள்ளனர். சமாதானம் செய்யவந்த சக்திவேல் என்பவரையும் அவர்கள் நால்வரும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து நால்வரையும் கைதுசெய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த கபடி விளையாட்டு